விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஜெயங்கொண் டான் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு கடந்த 9-ம்தேதி இரவு 7 மணிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, பின்தொடர்ந்து ஆட்டோவில் வந்த இருவர், சிறுமியிடம் பேச்சு கொடுத்து கடத்த முயன்றனர்.
சிறுமி கூச்சலிடவே, கிராம மக்கள் ஓடி வந்தனர். இதனால் சிறுமியை விட்டுவிட்டு ஆட்டோவில் வந்தவர்கள் தப்பித்து சென்றனர். இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் செஞ்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “செஞ்சியை அடுத்த ஜெயங் கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியிடம் ஆட்டோவில் வந்த அறிமுகம் இல்லாத இருவர் பேச்சு கொடுத்துள்ளனர்.
இது குறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் ஆட்டோவை கண்டறிய செஞ்சி டிஎஸ்பி ரமேஷ்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் 4 தனிப்படைகள அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 8 முக்கிய சாலை சந்திப்புகளில் வாகன தணிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது” என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஜெயங்கொண்டான் கிராமத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இருக்கும் செல்போன் டவர்களின் பதிவான எண்கள், கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தில் கடந்த அக். 12-ம் தேதி அதிகாலை 7 வயது சிறுமி கடத்தப் பட்டதற்கும், ஜெயங் கொண்டான் சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையிலும் விசாரணை நடைபெறுகிறது.