

மிலிரன்
வண்டலூர்: மொபெட் மீது வேன் மோதிய விபத்தில், தந்தையின் கண் எதிரே 6 வயது மகன் உயிரிழந்தார். வண்டலூரைச் சேர்ந்தவர் சரவணன் (43).
உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் தனது மகள் டிசானா (12), மகன் மிலிரன் (6) ஆகியோரை மொபெட்டில் அழைத்துக்கொண்டு வண்டலூரில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று காலை சென்று கொண்டிருந்தார்.
வண்டலூர் மேம்பாலத்தில் எதிர்திசையில் சென்றுகொண்டிருந்தபோது, தாம்பரத்திலிருந்து படப்பை நோக்கிச் சென்ற வேன், மொபெட் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் மிலிரன் பலத்த காயமடைந்து, தந்தையின் கண் எதிரிலேயே சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சரவணன், அவரது மகள் டிசானா ஆகியோர் காயமடைந்தனர்.
இதற்கிடையே வேன் மோதியதில் மற்றொரு மொபெட்டில் வந்த முகமது ஷாகித் (28) என்பவரும் காயமடைந்தார். பொதுமக்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநர் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.