

திருப்புவனம்: திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் கத்தியால் தாக்கப்பட்ட ஒடிசா மாநிலத் தொழிலாளர்கள் 2 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மணலூர் பகுதியில் உள்ள தனியார் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோசூரன் (29), சஸ்வராஜ் தெக்குரி (25) ஆகியோர் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், இன்று அவர்கள் வைகை ஆற்றில் இயற்கை உபாதை கழிக்க சென்றனர். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மர்ம நபர்கள் 2 பேர், மனோசூரன் , சஸ்வராஜ்தெக்குரி ஆகிய இருவரையும் கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் காயமடைந்த இருவரும் அவர்களது நண்பர்கள் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மனோசூரன் அளித்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீஸார் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து தனிப்படைகள் அமைத்து ஒடிமா மாநிலத் தொழிலாளர்களை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.
ஏற்கெனவே திருத்தணியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்கள் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது மறைவதற்குள் சிவகங்கை மாவட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த மேலும் இருவர் தாக்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.