புகார் அளித்த பெண் ஐ.டி ஊழியரை தனிமைக்கு அழைத்த உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
சென்னை: புகார் அளித்த பெண் ஐ.டி ஊழியரை தனிமைக்கு அழைத்த காவல் உதவி ஆணையர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை தி.நகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த, கனடாவில் பணியாற்றும் ஐ.டி. இளம்பெண் ஊழியர் ஒருவர், இதேபோன்ற ஐடி பணியில் இருக்கும் சென்னையைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்துள்ளார். இருவரும் சென்னை வந்தபோது நெருங்கிப் பழகினர்.
திருமணம் செய்துகொள்ள தயாரான நிலையில், காதலனுக்கு ஏற்கெனவே திருமணமான தகவல் அப்பெண்ணுக்கு தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், தன்னை ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
உதவி ஆய்வாளர் பெனாசீர் பேகம் விசாரணை நடத்தினார். அப்பெண்ணுக்கு நியாயம் கிடைக்க உறுதி அளித்ததுடன், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களை ஆன்லைன் வாயிலாக பெற்று அதற்கான கட்டணத்தை அப்பெண்ணை செலுத்தும்படி செய்தார்.
இதேபோன்று, சம்பந்தப்பட்ட இளைஞரிடமும் வழக்கில் இருந்து விடுவிப்பதாகக் கூறி ஆன்லைன் வாயிலாக பொருட்களை பெற்றுக் கொண்டார். இதையடுத்து, பெண் உதவி ஆய்வாளரின் உதவியால், அந்த இளைஞர் ஜாமீன் பெற்று கனடா தப்பிச் சென்று விட்டார்.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த அப்பெண், இதுகுறி்த்து சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் திஷா மிட்டலிடம் முறையிட்டார். அவர் விருகம்பாக்கம் சரக உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபுவிடம் விசாரிக்க உத்தரவிட்டார்.
பாலகிருஷ்ண பிரபுவோ விசாரணை என்ற பெயரில் புகார் அளித்த பெண்ணிடம் வாட்ஸ்அப் காலில் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். தனிமையில் இருக்க அழைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆன்லைன் மூலமாக பொருட்கள் பெற்ற உதவி ஆய்வாளர் பெனாசீர் பேகம் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
உதவி ஆணையரின் செயல் எல்லை மீறியதால், இணை ஆணையரிடம் இதுதொடர்பாக அப்பெண் முறையிட்டதுடன், வாட்ஸ்அப் தகவல்களையும் அளித்தார்.
இதுகுறித்து புகாருக்குள்ளான உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் உதவி ஆய்வாளர் பெனாசீர் பேகம் இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு இணை ஆணையர் மாற்றினார். இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.
ஆய்வாளர் மீது நடவடிக்கை: கோயம்பேடு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தாஹிராவிடம் இளம்பெண் ஒருவர் அளித்த புகாரில், ‘நான் காதலனால் ஏமாற்றப்பட்டு கர்ப்பமடைந்து விட்டேன். தற்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து, விசாரணை நடத்துவதாக கூறிய தாஹிரா, அவரிடம் இருந்து ரூ.1,500-ஐ வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்துள்ளார்.
புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இளம்பெண், மேற்குமண்டல இணை ஆணையர் திஷா மிட்டலிடம் அளித்த புகாரின் அடிப்படையில் தாஹிரா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
