ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் சென்ற கார் விபத்து - 4 பேருக்கு லேசான காயம்

ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் சென்ற கார் விபத்து - 4 பேருக்கு லேசான காயம்
Updated on
1 min read

சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏ.அர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் தனது நண்பருடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் நண்பர்கள் இருவரும் லேசான காயம் அடைந்தனர்.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் (23). இவர், பாடகராக திரையுலகில் வலம் வருகிறார். இந்நிலையில், அமீன் இன்று தனது நண்பரான சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த பார்கவ் (24) என்பவருடன் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். அமெரிக்காவில் பொறியியல் படித்து வரும் பார்கவ் காரை ஓட்டியதாக கூறப்படுகிறது.

கோயம்பேட்டில் இருந்து கிண்டி நோக்கி சென்ற அவர்கள், அதிகாலை சுமார் 3.30 மணியளவில் கிண்டி ஜவகர்லால் நேரு 100 அடி சாலை, ஒலிம்பியா சிக்னல் அருகே சென்றனர். அப்போது நந்தம்பாக்கத்தில் இருந்து கிண்டி நோக்கி வந்த கால் டாக்சி எதிர்பாராதவிதமாக, அமீன் சென்ற கார் மீது மோதியது.

இந்த விபத்தில் 2 கார்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் காரில் இருந்த அமீன் மற்றும் அவரது நண்பருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கால் டாக்சியை ஓட்டி வந்த திரிபுராவை சேர்ந்த ரஜாக் அலி (28) மற்றும் அதில் பயணம் செய்த சைதாப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் (30) ஆகியோரும் காயம் அடைந்தனர்.

கால் டாக்சி டிரைவர் ரஜாக் அலி மற்றும் பயணி வெங்கடேசன் ஆகியோர் சிகிச்சைக்காக கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் இருவரும் வீடு திரும்பினர். அமீனும், அவரது நண்பர் பார்கவும் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

முன்னதாக விபத்து ஏற்பட்டவுடன் அமீன் சென்ற சொகுசு காரின் கதவுகள் உடனடியாக லாக் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் காரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீஸார் கிரேன் உதவியுடன் விபத்தில் சிக்கிய காரை மீட்டு அப்புறப்படுத்தினர். இந்த விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் சென்ற கார் விபத்து - 4 பேருக்கு லேசான காயம்
காவிரி பிரச்சினை: கர்நாடகாவுக்கு எதிரான தமிழக அரசின் புதிய மனு மீது ஆக.13-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in