

வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கூமாபட்டி தனியார் பாரில் இலவசமாக மது கேட்டு தகராறில் ஈடுபட்டு, நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி-நெடுங்குளம் சாலையில் எஸ்.கொடிக்குளத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவர் அரசு உரிமம் பெற்று தனியார் பார் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை 10.50 மணிக்கு பாருக்கு வந்த கூமாபட்டியைச் சேர்ந்த ரமணி (44), ராமசாமியாபுரத்தை சேர்ந்த ராஜா (45), ஆத்தங்கரைபட்டியை சேர்ந்த வீரய்யா (50) ஆகியோர் மது பாட்டில் கேட்டுள்ளனர். அங்கு வேலை பார்க்கும் மாயன் 11 மணிக்குத்தான் கடை திறக்கப்படும், கிளப் உறுப்பினர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் எனக் கூறி உள்ளார்.
பின்னர் கடைக்கு வந்த ரமணி மதுவை வாங்கிவிட்டு பணம் தராமல் தகராறில் ஈடுபட்டு மிரட்டிச் சென்றுள்ளார். பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் பாருக்கு வந்த 3 பேரும் இலவசமாக மது கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். விற்பனையாளர் தர மறுத்ததும், வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் 3 நாட்டு வெடிகுண்டுகளை ரமணி வீசி உள்ளார். 3 வெடிகுண்டுகளும் வெடித்ததில், பார் விற்பனையாளர் மாயன்லேசான காயமடைந்தார். இதுகுறித்தபுகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த கூமாபட்டி போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ரமணி, ராஜாவை கைது செய்தனர். வீரய்யாவை தேடி வருகின்றனர்.
கைதான ரமணி மீது கொலை வழக்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் கூமாபட்டி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாகவும், ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அவருக்கு நாட்டு வெடிகுண்டு எங்கிருந்து கிடைத்தது, மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் வெடிகுண்டு வைத்து வேட்டையாடுதல் நடக்கிறதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.