

சென்னை: கையாடல் பணத்துடன், தோழியை அழைத்துக்கொண்டு துபாயிலிருந்து தப்பி சென்னை வந்த ஏஜென்சி ஊழியர் கடத்தி தாக்கப்பட்ட சம்பவத்தில், ஏஜென்சி உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் சரத்குமார்(29). துபாயில், ஜெயமோகன் என்பவர் நடத்திவரும் மேன் பவர் ஏஜென்சி நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 26-ம் தேதி சரத்குமார், தனது தோழி ஒருவருடன் விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்துக்கு தனது உறவினர் அருண்பாண்டியனுடன் வந்த ஜெயமோகன், சரத்குமார் மற்றும் அவரது தோழியை மடக்கி பிடித்து இருவரையும் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்த முயன்றார்.
இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பரங்கிமலை போலீஸார் 4 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, சரத்குமார், தான் பணி செய்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.46 லட்சத்தை கையாடல் செய்து தப்பியது தெரியவந்தது.
இதையடுத்து, இரு தரப்பினரும் இந்த பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்வதாக தெரிவித்து வெளியேறினர். காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் ஜெயமோகனும் அருண்பாண்டியனும் சேர்ந்து சரத்குமார் மற்றும் அவரது தோழியை காரில் கடத்தி சாலிகிராமம் தனலட்சுமி காலனி பகுதியில் உள்ள விடுதியில் அடைத்து வைத்து, கையாடல் செய்த பணத்தை கேட்டு தாக்கினர்.
இதையறிந்த சரத்குமாரின் அண்ணன் சரவணகுமார், இதுதொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவித்தார். விருகம்பாக்கம் போலீஸார் விரைந்து சென்று சரத்குமாரையும், அவரது தோழியையும் மீட்டனர். ஜெயமோகனையும், அவரது நண்பரையும் போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.