

புதுச்சேரி: புதுச்சேரியில் செவிலியரை கொன்று தலைமறைவான ரவுடி, ரயிலில் அடிபட்ட நிலையில் வேலூர் காட்பாடியில் உயிரிழந்து கிடந்தார். அவர், தற்கொலை செய்து கொண்டதற்கான குறிப்புகள் ஏதும் இல்லை என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரி வில்லியனூர் கோபாலன் கடை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தனுஷ்கோடி மகள் ஜெயஸ்ரீ (22). நர்சிங் முடித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கலைக்குமாரும் ஜெயஸ்ரீயும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
கலைக்குமார் பல்வேறு வழக்குகளுக்காக சிறைக்கு சென்றுள்ளார். இதனால் கலைக்குமாருடன், ஜெயஸ்ரீ பேசுவதை நிறுத்தியுள்ளார். சிறையில் இருந்து வெளியில் வந்தபிறகு ஜெயஸ்ரீயிடம் பேச கலைக்குமார் பலமுறை முயற்சி செய்துள்ளார்.
ஆனால், ஜெயஸ்ரீ பேச மறுத்ததால் கடந்த 26-ம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஜெயஸ்ரீயிடம் முக்கிய விஷயம் பேச வேண்டும் எனக் கூறி அழைத்த கலைக்குமார், அவரது வீட்டின் அருகே உள்ள காலிமனைக்கு வரவழைத்து கொலை செய்தார். இதில் கலைக்குமார் தலைமறைவானார்.
வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு புதுச்சேரி, விழுப்புரம், திருப்பதி, உட்பட பல பகுதிகளில் தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று வேலூர் காட்பாடி அருகே ரயில் தண்டவாளம் அருகே ரவுடி கலைக்குமார் இறந்து கிடப்பதாக வில்லியனூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு கிடைத்த புகைப்படங்களின் அடிப்படையில் இறந்தது ரவுடிதான் என்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
அவர் ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடலை புதுச்சேரி கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டனர்.
காட்பாடி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது, “இறந்தவரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டபோதுதான் இறந்தவர் கலைக்குமார் என்பது தெரிந்தது. அந்த எண் அவரது அம்மா எண்ணாகும்.
சென்னை நோக்கி சென்ற ரயில் மோதி அவர் இறந்திருக்கலாம் என வழக்குப் பதிவு செய்துள்ளோம். அவர் தற்கொலை செய்து கொண்டதற்காக ஏதும் குறிப்புகள் இல்லை” என்று தெரிவித்தனர்.