ஆவடி அருகே மினி சுற்றுலா பேருந்து கவிழ்ந்து இளம்பெண் உயிரிழப்பு; 12 பேர் படுகாயம்
ஆவடி: ஆவடி அருகே வெள்ளானூர் பகுதியில் மினி சுற்றுலா பேருந்து கவிழ்ந்து இளம்பெண் உயிரிழந்தார். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் இருந்து, மினி சுற்றுலா பேருந்து ஒன்று இன்று அதிகாலை 20-க்கும் மேற்பட்டோருடன் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்தப் பேருந்து வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்டச்சாலையில், ஆவடி அருகே வெள்ளானூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலை தடுப்பின் மீது மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்தச் சம்பவத்தில், படுகாயமடைந்த ரிவேகா (20) என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த ஆவடி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார், சம்பவ இடம் விரைந்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
