ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையம் அருகே திருநங்கை தீக்குளித்ததால் பரபரப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் அருகே சாலையில் திருநங்கை தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே மணிக்கூண்டு பகுதியில் திருநங்கைகள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக காவல் துறைக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் பெண் எஸ்.ஐ தலைமையில் அங்கு சென்ற போலீஸார் திருநங்கைகள் முத்தாரி(27), ஷர்மி(21) ஆகியோரை எச்சரித்து அனுப்பினர். அங்கிருந்து வடக்கு ரத வீதி சென்ற திருநங்கைகள் கடைகள் மற்றும் நடந்து சென்ற பொதுமக்களிடம் பணம் கேட்டு உள்ளனர். போலீஸார் எச்சரித்ததால் திருநங்கைகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வீடியோ பதிவு செய்தனர்.
அவர்களது செல்போனை பெற்றுக் கொண்ட போலீஸார் காவல் நிலையம் வருமாறு கூறி சென்றனர். காவல் நிலையம் வந்த முத்தாரி(27), ஷர்மி(21) இருவரிடமும் போலீஸார் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த 5 திருநங்கைகள் காவல் நிலையத்தில் உள்ள இரு திருநங்கைகளை வெளியே விடக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் இருவர் சாலையில் வந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்தனர். போலீசார் ஒருவர் மீது தண்ணீர் ஊற்றி மீட்ட நிலையில், சாலையில் ஓடிய தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த முத்தரசி(25) நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன் உடலில் தீ வைத்தார்.
காயமடைந்த முத்தரசியை போலீஸார் இருசக்கர வாகனத்தில் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டி.எஸ்.பி பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் முத்துகுமார் ஆகியோர் திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து சிவகாசி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
