

தென்காசி: ஆலங்குளம் அருகே கனிமம் ஏற்றிச் சென்ற லாரி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் இருந்து கல், எம் சேண்ட் உள்ளிட்ட கனிமவளங்கள் கனரக லாரிகள் மூலம் கொண்டுசெல்லப்படுகின்றன. கனரக வாகனங்களில் கனிமவளங்கள் கொண்டுசெல்லப்படுவதால் கிராம சாலைகள் சேதமடைந்து வருவதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், இதற்கு தீர்வு காண வேண்டும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மருதம்புத்தூர் அருகே கல் குவாரியில் இருந்து இன்று அதிகாலையில் கனிமவளம் ஏற்றப்பட்ட லாரி ஒன்று அம்பேத்கர் நகர் அருகே சென்றுகொண்டு இருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் சிலர், லாரியை வழிமறித்து, அதன் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில், செங்கோட்டையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுப்பிரமணியன் (38) பலத்த காயமடைந்தார்.
லாரியின் முன்பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக வந்த சக லாரி ஓட்டுநர்கள் விரைந்து சென்று, காயமடைந்த ஓட்டுநரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பின்னர் அவர், மேல் சிகிச்கைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, பெட்ரோல் குண்டு வீசியவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி ஓட்டுநர் மீதான முன்விரோதம் காரணமாக இந்த சம்பவ நடந்ததா அல்லது கனிமவள லாரிகளால் பாதிப்புக்கு ஆளாகியவர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனிமவள லாரி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.