Published : 31 May 2023 06:53 AM
Last Updated : 31 May 2023 06:53 AM

சென்னை | ராஜீவ் காந்தி மருத்துவமனையில் டாக்டரை கத்தரிக்கோலால் குத்திய நோயாளி கைது

சென்னை: சென்னை திருநின்றவூரை சேர்ந்த பாலாஜி (34) என்பவர், குடல் பிரச்சினைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் காரணமாக இவர் சற்று மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் நேற்றுஅதிகாலை 1 மணி அளவில்அங்கு இருந்த மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்தரிக்கோலை எடுத்து, பயிற்சிமருத்துவர் சூர்யாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த மருத்துவர் சூர்யா, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அருகே இருந்தவர்கள்,பாலாஜியை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை டீன் தேரணிராஜன் பேச்சுவார்த்தை நடத்தி, மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, போராட்டத்தை பயிற்சி மருத்துவர்கள் கைவிட்டனர்.

பிறகு, சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடியை சந்தித்து, பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.

இதற்கிடையே, மருத்துவரை தாக்கிய நோயாளி பாலாஜியை போலீஸார் கைது செய்தனர். ஜனநாயக தமிழ்நாடு அரசுடாக்டர்கள் சங்க மாநிலத் தலைவர்கே.பாலகிருஷ்ணன் கூறியபோது, ‘‘அரசு மருத்துவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

எனவே, அரசுமருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அவசர சிகிச்சை பிரிவு நுழைவுவாயில்களில் ஆயுதம் ஏந்திய போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x