

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த குந்தலாடி பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில், அதிகாலையில் 2 பேர் மதுபானங்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், டாஸ்மாக் மதுக்கடையின் கதவு திறந்து கிடந்ததை கண்டனர். அருகே சென்று பார்த்தபோது, பூட்டை உடைத்து இருவர் கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர்.
பிடிக்க முயன்ற போலீஸாரை தாக்கிவிட்டு, இருவரும் தப்பியோட முயன்றனர். சுதாரித்துக்கொண்ட போலீஸார், தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், சாம்பார் மணி என்று அழைக்கப்படும் கொள்ளையன் காலில் தோட்டா பாய்ந்து காயமடைந்தார். அவரை மீட்டு, கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த போலீஸார் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தப்பிச்சென்ற மற்றொரு கொள்ளையனை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, "கேரளா மாநிலத்தை சேர்ந்த சாம்பார் மணி மீது அங்கு பல்வேறு வழக்குகள் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருப்பவர். அவரும், அவரது கூட்டாளியும் கொள்ளையில் ஈடுபட்டபோது கையும், களவுமாகபிடித்தோம். 2 பேரும் காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர். வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தினோம்" என்றனர்.