கொடைக்கானல் அருகே கடமான் வேட்டை:  மூன்று பேர் கைது 

கொடைக்கானல் அருகே கடமான் வேட்டை:  மூன்று பேர் கைது 

Published on

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பெரும்பாறையில் கடமானை வேட்டையாடிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்து, 5 ஏர்கன், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி அடுத்துள்ள பெரும்பாறை பகுதியில் கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனவர் அறிவழகன், வனக் காப்பாளர்கள் பீட்டர் ராஜா, திலக ராஜா, ராமசாமி ஆகியோர் நேற்று (மே 23) இரவு ரோந்து சென்றனர். நேர்மலை பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் விளக்கு வெளிச்சம் தெரிந்ததால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது சிலர் நெற்றியில் விளக்கை கட்டிக் கொண்டு சுற்றித்திரிந்தனர்.

அவர்களை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். விசாரணையில், வெள்ளரிக்கரையை சேர்ந்த ஜோதிலிங்கம் (31), மஞ்சள்பரப்பை சேர்ந்த ரஞ்சித் (33), மதன்குமார் (19) என்பதும், கடமானை வேட்டையாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கடமான் இறைச்சி, 5 ஏர்கன்கள், தோட்டாக்கள் மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். கைதான மூவரையும் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பழநி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய சிலரை தேடி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in