

சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவல் உட்கோட்டங்களில் சிவகாசி 25, ராஜபாளையம் 25, ஸ்ரீவில்லிபுத்தூர் 20, விருதுநகர் 18, அருப்புக்கோட்டையில் 11, சாத்தூர் 8, திருச்சுழி 14 என மொத்தம் 121 இடங்களில் அனுமதி இன்றி செயல்படும் பார்களில் ஆய்வு செய்து 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட டி.எஸ்.பிக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தவிட்டுள்ளார்.
சிவகாசி காவல் உட்கோட்டத்தில் சிவன் கோயில் அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாகம், சிவகாசி - விருதுநகர் சாலையில் 3, விஸ்வநத்தம் கிராமத்தில் 3, பள்ளபட்டி, நாராணாபுரம், சாமிநத்தம், ரிசர்வ் லைன், அனுப்பன்குளம், திருத்தங்கல் உட்பட 25 இடங்களில் டாஸ்மாக் கடை அருகே அனுமதி இன்றி பார்கள் செயல்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே 2, நகர் காவல் நிலையம் அருகே 1, தெற்கு ரத வீதி 1, ராமகிருஷ்ணபுரம், அத்திகுளம், சிங்கம்மாள்புரம், இடையபொட்டல் தெரு, சுந்தரபாண்டியம், மல்லி, கிருஷ்ணன்கோவில், வலையங்களும் உள்ளிட்ட 20 இடங்களில் டாஸ்மாக் கடை அருகே அனுமதி இன்றி பார்கள் செயல்படுவதாக தகவல் வந்துள்ளது.
அதே போல் ராஜபாளையம் காவல் உட்கோட்டத்தில் ராஜபாளையம் - தென்காசி சாலையில் 3, ராஜபாளையம் நகரில் 9, செட்டியார்பட்டி கிராமத்தில் 3, தெற்கு வெங்காநல்லூர் 2, சேத்தூர் உட்பட 25 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி பார்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த பார்களில் நேரடியாக ஆய்வு செய்து, 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட டி.எஸ்.பிக்களுக்கு எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். நகரின் முக்கிய பகுதிகளில் செயல்படும் சட்டவிரோதமாக செயல்படும் பார்களால் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத மது விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்காததால் பல்வேறு குற்றசம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தஞ்சாவூரில் அனுமதியின்றி செயல்பட்ட பாரில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்ததை அடுத்து சட்டவிரோத பார்கள் மீது 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி உத்தவிட்டார். இது குறித்து சட்டவிரோதமாக பார்கள் நடத்துபவர்களுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்ததால் கடந்த இரண்டு நாட்களாக பார்களை திறக்கவில்லை என கூறப்படுகிறது.