தனியார் செல்போன் கோபுரம் மாயம் - போலீஸார் வழக்கு பதிவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தனியார் செல்போன் கோபுரம் மாயமானது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தில் சென்னையைச் சோ்ந்த ஜிடிஎல் இன்ஃப்ராஸ்ட்ரக்ஷர் என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான செல்போன் கோபுரம் இருந்தது. இது, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த கருத்தமுத்து, பெருமாயி, நித்யானந்தம்மாள், கிருஷ்ணமூர்த்தி, மங்களேஸ்வரி ஆகியோருக்குச் சொந்தமான இடத்தில் நிறுவப்பட்டிருந்தது.

ரூ.28.57 லட்சம் மதிப்பு: இந்தக் கோபுரத்தின் செயல்பாடு கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் மேலாளரான சென்னையைச் சேர்ந்த தாஜ்மல்கான் சமீபத்தில் வந்து பார்த்தபோது ரூ.28.57 லட்சம் மதிப்புள்ள செல்போன் கோபுரம் மற்றும் மின் சாதனப் பொருட்கள் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் ராமநாதபுரம் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in