

புதுச்சேரி: புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் ஜெர்மன் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் ஜனாஸ்விங் (20). இவர் திண்டிவனம் அருகே கோணமங்கலம் கிராமத்தில் தனியார் அறக்கட்டளையில் தங்கி தன்னார்வலராக சேவையாற்றி வருகிறார். ஜனாஸ்விங் கடந்த 7-ம் தேதி பெங்களுருவில் உள்ள தனது தோழியை பார்ப்பதற்காக புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் சொகுசு பேருந்தில் சென்றுள்ளார்.
அப்போது அவரது பின் சீட்டில் இருந்த இளைஞர், ஜனாஸ்விங்கிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த ஜனாஸ்விங் இது குறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப் - இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அந்த இளைஞரை அடையாளம் காணும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். இதில் ஜெர்மன் நாட்டு பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் பெங்களுரை சேர்ந்த சரத் (22) என்பதும், அங்குள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ படித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.
ஹாக்கி வீரரான இவர், கடந்த 5-ம் தேதி தனது தோழியுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து விட்டு திரும்ப சென்றபோது, பேருந்தில் தனக்கு முன் சீட்டில் பயணித்த ஜெர்மன் நாட்டு இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, பெங்களுர் விரைந்த தனிப்படை போலீஸார் ஒசூர் மெயின்ரோடு பவானி நகர் தனியார் பல்கலைக்கழகம் அருகில் இருந்த சரத்தை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் சரத்தை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.