புற்றுநோய் மருந்து வாங்கி தந்தால் கமிஷன் தருவதாகக் கூறி ஓசூர் தொழிலதிபரிடம் ரூ.1.94 கோடி மோசடி

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: புற்றுநோய்க்கான மருந்து வாங்கி தந்தால் கமிஷன் தருவதாகக் கூறி ஓசூர் தொழிலதிபரிடம் ரூ.1 கோடியே 94 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலை மீனாட்சி நகரை சேர்ந்தவர் இளங்கோ(73). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ஏற்றுமதி ஆலோசகராக இருந்து வருகிறார். வணிக நோக்கத்திற்காக அவர் தனது விவரங்களை இந்திய ஏற்றுமதி அமைப்பு கூட்டமைப்பில் (எப்ஐஇஓ) பதிவு செய்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி, மருத்துவர் மெலிசா கிப்சன் என்பவர் அவரிடம் வாட்ஸ் மூலம் தொடர்பு கொண்டு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தான் அமெரிக்க ஆராய்ச்சி மருத்துவர் என்றும், மருத்துவ நோக்கத்திற்காக புற்று நோய் மருந்துக்கான மூலப்பொருட்கள் தனக்கு தேவைப்படுவதாகவும், அதனை தாங்கள் வாங்கி கொடுத்தால் அதற்கு உரிய கமிஷன் தொகையை தருவதாகவும் கூறினார்.

இதனை நம்பிய இளங்கோ, அவர் கூறிய மருந்து பொருட்களை வாங்கி அனுப்பினார். அதற்கு உரிய கமிஷன் தொகை கிடைக்கவே, தொடர்ந்து அவரிடம் பேசி வந்துள்ளார். மேலும் மருந்து பொருட்கள் வாங்குவதற்காக குறிப்பிட்ட சில வங்கி கணக்குகளுக்கு தொகை அனுப்ப மருத்துவர் மெலிசா கிப்சன் கூறியதின் பேரில், 6 வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 94 லட்சத்து 95 ஆயிரத்து 820 தொகையை இளங்கோ அனுப்பினார்.

அந்த தொகை கிடைத்த பிறகு மெலிசா கிப்சன் என்கிற பெயரில் பேசிய நபர், இளங்கோவுடன் பேசுவதை தவிர்த்தார். தொடர்ந்து அவர் விசாரித்த போது மேற்கண்ட நபர், போலியாக வங்கி கணக்குகளை கொடுத்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்தது தெரிய வந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளங்கோ கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in