

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே ஒரு மாத பெண் குழந்தையை விற்ற தந்தை உட்பட 4 பேரை, போலீஸார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே பழக்கனூத்து அடுத்துள்ள தாத்தாகவுண்டனூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கோபி. இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ருக்மணிக்கு கடந்த மாதம் 3-வதாகவும் பெண் குழந்தை பிறந்தது. கணவன், மனைவி இருவரும் கூலி வேலை செய்வதால், 3 பெண் குழந்தைகளையும் வளர்ப்பது சிரமம் எனக் கருதி, 3-ஆவதாக பிறந்த பெண் குழந்தையை விற்க திட்டமிட்டனர்.
அதன்படி, அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன், ஒட்டன்சத்திரம் காந்தி நகரை சேர்ந்த தேன்மொழி, கரூர் பரமத்திவேலூரைச் சேர்ந்த தமிழரசி ஆகியோர் உதவியுடன், சில தினங்களுக்கு முன்பு கரூரைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கு ரூ.3 லட்சத்துக்கு குழந்தையை விற்றுள்ளனர். இதன் பின்னர், தாதக்கவுண் டனூரைச் சேர்ந்த செவிலியர், தம்பதியிடம் குழந்தை குறித்து கேட்டபோது, முன்னுக்குப் பின் முரணமாக பதிலளித்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த செவிலியர், ஒட்டன் சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸார் நடத்திய விசாரணை யில், குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையின் தந்தை கோபி, உடந்தையாக இருந்த மணிகண்டன், தேன்மொழி, தமிழரசி ஆகியோரை போலீஸார் கைது செய்து, குழந்தையை மீட்டனர்.