

மதுரை: மதுரை மேலூர் அருகே சனிக்கிழமை சென்னையிலிருந்து ராஜபாளையத்திற்கு சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் கார் ஓட்டுநர் மற்றும் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர். குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை திருவிக நகரை சேர்ந்த ஜான் தங்கராஜ் மகன் ஹானஸ்ட் ராஜ், இவரது மனைவி பவானி, அவர்களது 10 மாதக் குழந்தை, ஹானஸ்ட்ராஜின் தாயார் ஆகியோர் ராஜபாளையத்தில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக காரில் வெள்ளிக்கிழமை இரவு காரில் புறப்பட்டனர். காரை சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த பாலாஜி (55) என்பவர் ஓட்டினார்.
திருச்சி- மதுரை நான்கு வழிச்சாலையில் சனிக்கிழமை காலையில் மேலூர் சூரக்குண்டு முனிக்கோயில் விலக்கு அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கார் ஓட்டுநர் பாலாஜி, காருக்குள் இருந்த ஹானஸ்ட்ராஜ், மனைவி பவானி, இவர்களது 10 மாதக்குழந்தை மகிழ், ஜெபராணி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் பவானி, கார் ஓட்டுநர் பாலாஜி ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் காயமடைந்த ஹானஸ்ட்ராஜ், மகிழ் (10 மாதக்குழந்தை), ஜெபராணி (47) ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து மேலூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.