

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே நடந்த இருவர் படுகொலை தொடர்பான விசாரணைக்கு, கிருஷ்ணகிரி ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் நாளை (20-ம் தேதி) நேரில் ஆஜராகத் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அருணபதியில் தண்டபாணி என்பவர் காதல் திருமணம் செய்த தனது மகன் சுபாஷ் மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த தாய் கண்ணம்மாள் ஆகியோரை கடந்த 15-ம் தேதி, வெட்டிக் கொலை செய்தார். இதில், படுகாயம் அடைந்த அவரது மருமகள் அனுசுயா (25) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இக்கொலை தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹேல்டர் நாளை (20-ம் தேதி) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் விசாரணை மேற்கொள்ள உள்ளார். இப்படுகொலை தொடர்பான விவரங்களுடன் கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேக்கப், எஸ்பி சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் நாளை (20-ம் தேதி) பகல் 12 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தொடர்புடைய அதிகாரிகள் மட்டுமே நேரில் ஆஜராக வேண்டும். இதில், சிறப்பு விசாரணை அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாகவும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.