கிருஷ்ணகிரி ஆணவக் கொலை: தற்கொலைக்கு முயன்று கைதான தந்தைக்கு தீவிர சிகிச்சை
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே கலப்புத் திருமணம் செய்த மகனை கொலை செய்த தந்தையை போலீஸார் தேடிவந்த நிலையில், அவர் தற்கொலை முயன்றதுள்ளது தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காதல் திருமணம் செய்த மகனை ஆணவக் கொலை செய்த தந்தை தற்கொலை முயன்றுள்ளார். ஊத்தங்கரை அடுத்த அருணபதியில், மகன் மற்றும் தன் தாயை வெட்டிக் கொன்று தப்பிய தண்டபாணி, அரூர் அடுத்த தீர்த்தமலை மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தனிமையில் சிறிது நேரம் இருந்த அவர் துக்கம் தாங்காமல் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
வலி தாங்க முடியாமல் தவித்த அவர் இரவு 9 மணி அளவில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவரை மருத்துவர்கள் விசாரிக்கும் போது நடந்த உண்மைகளை கூறியதையடுத்து ஊத்தங்கரை போலீஸார் அவரை மருத்துவமனையிலேயே வைத்து கைது செய்தனர். கழுத்து அறுபட்ட நிலையில் தண்டபாணிக்கு ஊத்தங்கரை மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கொலை பின்னணி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் குடும்பத்துடன் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் சுபாஷ் (28) திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அங்கு வேலை செய்தபோது, அரியலூர் மாவட்டம் ஜெயக்கொண்டம் பகுதியை சேர்ந்த அனுசுயா (25) என்பவரை காதலித்து வந்தார். சுபாஷ் மற்றும் அனுசுயா இருவரும் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் சுபாஷின் தந்தை தண்டபாணி, இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அனுசுயாவின் வீட்டில் காதலுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி சுபாஷ், அனுசுயா ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர், 2 பேரும் திருப்பத்தூர் மாவட்டத்தில் குடியேறினர். சுபாஷ் திருப்பத்தூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மகன் காதல் திருமணம் செய்ததால், ஆத்திரத்தில் இருந்த தண்டபாணி, தனது தாய் கண்ணம்மாளிடம், ‘உனது பேரனை வீட்டிற்கு விருந்திற்கு வரவழைத்து சமாதானம் பேசிக் கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார். பாட்டி கண்ணம்மாள் தான் சுபாஷின் காதலுக்கு முழு ஆதரவு தெரிவித்து வந்துள்ளார். மேலும், காதல் திருமணம் செய்த பேரனுக்கு வாடகை வீடு பார்த்தும் கொடுத்துள்ளார்.
தண்டபாணி சொன்னதை நம்பிய கண்ணம்மாள், தனது பேரன் சுபாஷ், அவரது மனைவி அனுசுயா ஆகியோரை தமிழ் புத்தாண்டுக்கு அருணபதியில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைத்து உள்ளார். இந்நிலையில், தம்பதியினர் நேற்று ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமத்தில் உள்ள பாட்டி கண்ணம்மாள் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இதையடுத்து, அங்கே இரவு உணவு முடித்துவிட்டு தங்கியுள்ளனர். அங்கு ஏற்கெனவே வந்திருந்த தண்டபாணி, இருவரிடமும் சகஜகமாக பேசியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில், தண்டபாணி கூர்மையான கத்தியால் தனது மகனை வெட்டியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு எழுந்த பாட்டி கண்ணம்மாள், மனைவி அனுசுயா ஆகியோர் தடுத்துள்ளனர். அப்போது, தனது தாய் கண்ணம்மாளையும் வெட்டிய தண்டபாணி, மருமகள் அனுசுயாவையும் துரத்தி துரத்தி வெட்டியுள்ளார். இதில், அனுசுயா மயக்கம் அடைந்ததால், உயிரிழந்துவிட்டதாக நினைத்து தண்டபாணி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
