மத்தூர் அருகே தோசை சுட்டு தராததால் ஆத்திரம் - மனைவி உட்பட 3 பேரை வெட்டியவர் கைது

மத்தூர் அருகே தோசை சுட்டு தராததால் ஆத்திரம் - மனைவி உட்பட 3 பேரை வெட்டியவர் கைது

Published on

கிருஷ்ணகிரி: மத்தூர் அருகே தோசை சுட்டு தராததால், மனைவி, மருமகள் மற்றும் பேத்தியைக் கத்தியால் வெட்டிய முதியவரை போலீஸார் கைது செய்தனர்.

மத்தூர் அருகே என்.மோட்டூர் மேட்டுகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கணேசன் (60). இவரது மனைவி மாதம்மாள் (50). இந்நிலையில், கணேசன் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியிடம் தோசை சுட்டுத் தரும்படி கேட்டார். சமையல் எரிவாயு தீர்ந்துவிட்டதால் தோசை சுட முடியாது என மாதம்மாள் மறுத்தார்.

இதில், ஆத்திரமடைந்த கணேசன், கத்தியால் மாதம்மாளின் தலை, கையில் வெட்டினார். தடுக்க வந்த மருமகள் விஜயலட்சுமி மற்றும் அவர் கையில் வைத்திருந்த தனிஷ்கா (2) ஆகியோரையும் வெட்டினார். இதில், படுகாயம் அடைந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக 3 பேரும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இதுதொடர்பான புகாரின் பேரில், மத்தூர் போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து, கணேசனைக் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in