

மதுரை: மதுரைக்கு பயிற்சிக்கு வந்த குஜராத் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சென்னை, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளனர் போலீஸார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் பொறியியல் பெண் பட்டதாரி. இவர் சிஏ படிக்கிறார். மதுரையில் நடந்த 2 நாள் சிஏ பயிற்சி கருத்தரங்கில் பங்கேற்க விமானம் மூலம் டிசம்பர் 17ல் மதுரை வந்தார். தெப்பக்குளம் பகுதியிலுள்ள தனியார் விடுதியில் தங்கினார். அப்போது, அதே கருத்தரங்கில் பங்கேற்க சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த அனீஷ் ஜெயின் (22), காஞ்சிபுரம் மாடவாக்கத்தைச் சேர்ந்த ஜெரோம் கதிரவன்(23) ஆகியோரும் மதுரைக்கு வந்தனர். இவர்களும் குஜராத் மாணவி தங்கிய விடுதியில் தங்கினர்.
இந்நிலையில், குஜராத் மாணவிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தெரிந்தவர் என்ற அடிப்படையில் அனீஷ் ஜெயினிடம் உதவி கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஜெரோம் கதிரவனுக்கு அனீஷ் ஜெயின் செல்போன் மூலம் தகவல் தெரிவித்து, மாணவிக்கு தேவையான உணவு பொருள் மற்றும் மருந்துகள் வாங்கி வரும்படி கூறியுள்ளார்.
அவரும் உணவு, மாத்திரை வாங்கி வந்தார். உணவை சாப்பிட்ட குஜராத் மாணவி சிறிது நேரத்தில் மயங்கிட, அவரை அனீஷ் ஜெயின், ஜெரோம் கதிரவன் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவி மதுரை காவல் ஆணையர் நரேந்திரனுக்கு தபால் மூலம் புகார் அனுப்பியுள்ளார்.
இதன்பேரில் மதுரை நகர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாலட்சுமி, சம்பந்தப்பட்ட இருவர்மீதும் வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து, காவல் ஆணையரின் உத்தரவின்பேரில் மதுரை மீனாட்சி கோயில் பகுதி காவல் உதவி ஆணையர் மீனாட்சி தலைமையில் ஆய்வாளர் கீதா உள்ளிட்ட 5 பேர் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். அனீஷ் ஜெயின், ஜெரோம் கதிரவன் ஆகியோரை கைது செய்தனர்.
மருத்துவ பரிசோதனைக்கு பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், ‘‘ஏற்கனவே சிஏ பயிற்சி வகுப்பு மூலம் குஜராத் மாணவியிடம் பழகினோம். மதுரையில் 2 நாள் கருத்தரங்கிற்கு வந்தபோது, மூவரும் ஒரே விடுதியில் தங்கி இருந்தோம். மாணவிக்கு உடல் நிலை பாதித்த நிலையில், அவரது தனிமையை பயன்படுத்தி அவருக்கு உதவி செய்வது போன்று தவறாக நடந்து கொண்டோம். உடல் நிலையை சரிசெய்ய மாத்திரை கொடுப்பது போன்று, தூக்க மாத்திரைகளை கொடுத்து பலாத்காரம் செய்தோம்’’ என கைதான இளைஞர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.