Published : 04 Apr 2023 07:13 AM
Last Updated : 04 Apr 2023 07:13 AM

திருச்சி | தங்க நகை வியாபாரியை கடத்தி நகை, பணம் பறித்த கும்பல்: ஒருவர் கைது

திருச்சி: திருச்சி தென்னூர் மூலக்கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் தாவூத்மகன் சாதிக்பாட்சா(37). தங்க நகைவியாபாரி. இவர், தினமும் வெளிநாடுகளில் இருந்து இரவில் திருச்சிவரும் விமானப் பயணிகளிடம் இருந்து தங்க நகைகள் வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு சாதிக்பாட்சா, தம்பி முகமது ஷெரீப்(27), உறவினர் நவ்சாத் ஆகியோருடன் திருச்சி விமானநிலையத்தில் இருந்து நகை மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை வாங்கிக் கொண்டு, காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, இவர்களை கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்த 8 பேர், சாதிக்பாட்சாவை அவரது வீட்டருகே கத்தியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்றனர். அப்போது, தடுமாறி கீழே விழுந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவரை, சாதிக்பாட்சா உறவினர்கள் பிடித்து, தாக்கி அரசு மருத்துவமனை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸார் வந்து நடத்திய விசாரணையில், அவர் அரியமங்கலத்தைச் சேர்ந்த கதிரேசன்(37) என்பதும், நகை மற்றும் பணத்துக்காக சாதிக்பாட்சா கடத்தப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, தாக்குதலில் காயமடைந்த கதிரேசன், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனிடையே, சமயபுரம் அருகே சாதிக்பாட்சாவை அந்த கும்பல் இறக்கிவிட்டு தப்பிவிட்டது. இதையடுத்து, போலீஸார் அங்குசென்று சாதிக்பாட்சாவை மீட்டுவிசாரித்தனர். இதில், தன்னைத் தாக்கி 25 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பில் வெளிநாட்டு கரன்சி ஆகியவற்றை அந்தக் கும்பல் பறித்துச் சென்றதாக சாதிக்பாட்சா தெரிவித்துள்ளார்.

தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா, துணை ஆணையர் தேவி ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாதிக்பாட்சா மற்றும் கதிரேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக கதிரேசனை கைது செய்த போலீஸார், தப்பியோடிய விமானநிலைய ஊழியரான பட்டுக்கோட்டை சமீர் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x