

சென்னை: விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளையின் இருசக்கர வாகனசாவியைப் பெற்று, அதிலிருந்த வீட்டுச் சாவியைப் பயன்படுத்தி அவரது வீட்டில் 35 பவுன் நகை திருடிய உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாப்பூர் அப்பர்சாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் நரேந்திரன் (26). ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருக்குக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. மறுநாள்சென்னை கே.கே.நகரில் உள்ள சித்தி மகள் வீட்டுக்கு குடும்பத்துடன் நரேந்திரன் விருந்துக்குச் சென்றார். விருந்தை முடித்துவிட்டு அடுத்த நாள் காலை மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்குத் திரும்பினார்.
இந்நிலையில், அடுத்தமாதம் 4-ம் தேதி மனைவிக்குதாலி பிரித்துக் கோர்ப்பதற்காக பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகைகள் காணாமல் போனதை அறிந்துஅதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். பல மாதங்களாகத் துப்பு கிடைக்காமலிருந்தது
.
நரேந்திரன் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் மீண்டும் ஆய்வு செய்தனர். அதில், நரேந்திரன் விருந்துக்குச் சென்றிருந்த, அவரதுசித்தி மகளின் கணவர் கோவைமதுக்கரை, குரும்பபாளையத்தை சேர்ந்த (தனியார் உணவு நிறுவன டெலிவரி பாய்) சுரேஷ் (35) என்பவரின் உருவம் பதிவாகி இருந்தது. இதையடுத்து அவரிடம்போலீஸார் விசாரித்தனர்.
விருந்துக்காக தனது வீட்டுக்கு வந்த நரேந்திரனிடம், சித்தி மகளின் கணவர் சுரேஷ், வெளியே செல்வதற்காகக் கூறி இருசக்கரத்தின் சாவியைக் கேட்டு வாங்கியுள்ளார். அதிலிருந்த வீட்டுச் சாவியைக் கொண்டு நரேந்திரன் வீட்டின்கதவு, பீரோ கதவு ஆகியவற்றைத் திறந்து நகைகளைத் திருடியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சுரேஷை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.