தொழிலதிபரை கடத்தியதாகப் புகார் | நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

தொழிலதிபரை கடத்தியதாகப் புகார் | நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: தொழிலதிபரை கடத்திய புகாரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி ராஜேந்திரன் உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி அருகே சக்தி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், தங்க முனியசாமி, ரவிச் சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து வேண்டுராயபுரத்தில் உள்ள முன்னா பயர் ஓர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையை நடத்தி வந்தார். அதன்பின் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜவர்மன் உள்ளிட்ட மூவரும் தங்களது பங்கு தொகையை பெற்றுக்கொண்டு தொழிலை விட்டு பிரிந்து சென்று விட்டனர்.

இந்நிலையில் போலி ஆவணங்கள் தயாரித்து தலா ரூ.2 கோடி கேட்டு ராஜவர்மன் உள்ளிட்டோர் தொழிலில் பங்கு கேட்டு ரவிச்சந்திரனை கடத்திச் சென்று மிரட்டியுள்ளனர். இதற்கு அப்போது டிஎஸ்பியாக இருந்த ராஜேந்திரன், எஸ்எஸ்ஐ முத்துமரியப்பன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வள்ளிமணாளன், ரவிச்சந்திரனின் குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் உள்ளதால், முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி ராஜேந்திரன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

அதன்படி முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன்(52), தங்க முனியசாமி(30), நரிக்குடி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ஐ.ரவிசந்திரன்(53), அவரது மனைவி அங்காள ஈஸ்வரி(50), ஓய்வு பெற்ற டிஎஸ்பி ராஜேந்திரன், எஸ்எஸ்ஐ முத்துமாரியப்பன் ஆகிய 6 பேர் மீது ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in