

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கானா சடாய் தெருவைச் சேர்ந்தவர் சேட்டு (37), எலெக்ட்ரீஷியன். இவரது மனைவி பானுமதி (32). தம்பதியருக்கு திருமண மாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு மிதுன்ராஜ் (9), கார்த்திக் (4) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தம்பதியருக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன் தினம் வீட்டில் இருந்த தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சேட்டு மனைவியை தலையணை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டில் இருந்து வெளியே சென்றார். மாலை வழக்கம் போல் மகன்களை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். வீட்டின் உள்ளே வந்த மகன்கள் அம்மாவை தேடியுள்ளனர்.
அப்போது, படுக்கையில் சுய நினைவின்றி கிடந்த தாயை கண்டு அவர்கள் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பானுமதியை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பானுமதி உயிரிழந்து பல மணி நேரம் ஆவதாகவும், அவரின் கழுத்து மற்றும் கைகளில் கீறல்கள் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் (பொறுப்பு) டீக்காராமன் தலைமையிலான காவல் துறையினர் சேட்டுவிடம் விசாரணை நடத்தினர். இதில், குடும்ப பிரச்சினை காரணமாக சேட்டு தனது மனைவியின் கழுத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சேட்டுவை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.