காரைக்காலில் நகை மோசடி வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் கைது

காரைக்காலில் நகை மோசடி வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் கைது
Updated on
1 min read

காரைக்கால்: காரைக்கால் ராஜாத்தி நகரைச் சேர்ந்த கைலாஷ் என்பவர், பெரமசாமிப் பிள்ளை வீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இவரது கடையில் போலி நகைகளை விற்க முயன்றதாக காரைக்கால் சின்னக்கண்ணு செட்டித் தெருவைச் சேர்ந்த பரசுராமன்(30), போலி நகையை கொடுத்தனுப்பி விற்கச் சொன்ன திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தைச் சேர்ந்த ரிபாத் காமில்(31) ஆகிய 2 பேரை காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்ந்து போலீஸார் விசாரணையில், ஏற்கெனவே மோசடி வழக்கு ஒன்றில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம் ஜேம்ஸ்பாண்ட், அவரது பெண் நண்பர் புவனேஸ்வரி ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஜெரோம் ஜேம்ஸ்பாண்ட்(35), புதுத்துறையைச் சேர்ந்த மொய்தீன்(31), திருமலைராயன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(35) ஆகியோரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். புவனேஸ்வரியை தேடி வருகின்றனர்.

இதனிடையே காரைக்காலில் உள்ள புதுவை பாரதியார் கிராம வங்கியில் ரூ.8 லட்சம் மதிப்பில் போலி நகை அடகு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் வங்கி நிர்வாகம் சார்பில் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த மோசடியிலும் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு தொடர்பு இருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள் காரைக்கால் மட்டுமின்றி புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் அடகுக் கடைகள், வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கான ரூபாய் பெற்றிருப்பதாக போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in