Published : 07 Mar 2023 06:25 AM
Last Updated : 07 Mar 2023 06:25 AM
கோவை: வளர்ப்பு மகளான பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
கோவையில், இரண்டாம் திருமணம் செய்த பெண் தனது மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு அவரது இரண்டாவது கணவர், வளர்ப்பு மகளான எட்டாவது படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்துள்ளார்.
அச்சம் காரணமாக யாரிடமும் இதுகுறித்து தகவல் தெரிவிக்காமல் இருந்து வந்த மாணவி 2022-ம் ஆண்டு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது தலைமையாசிரியரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
உடனடியாக தலைமையாசிரியர், அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அளித்த தகவலின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், வளர்ப்பு தந்தையை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கில் நீதிபதி ஜி.குலசேகரன் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளதாவது:
வழக்கமாக குற்றச்செயலில் ஈடுபடுபவரின் பெயர் தெரிவிக்கப்படும். இருப்பினும் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர் வளர்ப்பு தந்தை என்பதால், அவரின் பெயரை வெளியிட்டால் அதன் மூலம் மாணவியின் அடையாளம் வெளியே தெரியவாய்ப்பு உள்ளது.
இதனால் ஊடகத் துறையினர், வளர்ப்பு தந்தையின் பெயரை வெளியிடக் கூடாது. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி குலசேகரன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT