சிவகாசியில் இரு பெண்கள் குத்திக் கொலை: தூய்மைப் பணியாளர் கைது
சிவகாசி: சிவகாசி அருகே ஸ்டேட் பாங்க் காலனியில் வாரிசு வேலை பெறுவதில் ஏற்பட்ட தகராறில் முருகேஸ்வரி (50), தமயந்தி (60) ஆகிய இருவரை கத்தியால் குத்தி கொலை செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தூய்மை பணியாளர் காளிராஜன் (39) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் ரவி (34). இவரது மனைவி ரதிலட்சுமி (28). இவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சிவகாசி மாநகராட்சியில் ஓட்டுநராக பணியாற்றிய ரவி கடந்த 6 மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்தார். ரவி இறந்த பின் ரதிலட்சுமி குழந்தைகளுடன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.
ரவியின் வேலையை வாரிசு அடிப்படையில் பெறுவதில் அவரது தாய் முருகேஸ்வரி மற்றும் ரதிலட்சுமி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் துாய்மை பணியாளராக வேலை பார்க்கும் ரதிலட்சுமியின் சகோதரர் காளிராஜன் (39) சிவகாசிக்கு வந்து முருகேஸ்வரியுடன் வாக்குவாதம் செய்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் காளிராஜன் மறைத்து வைத்திருந்து கத்தியால் முருகேஸ்வரியை கத்தியால் குத்தியுள்ளார். அப்போது தடுக்க வந்த அவரது சித்தி தமயந்தியையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீஸார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து காளிராஜனை கைது செய்தனர். உயிரிழந்த முருகேஸ்வரியின் மூத்த மகன் கணேசன் எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். விருதுநகர் எஸ்பி சீனிவாச பெருமாள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து, போலீஸ்காரர் கணேசனுக்கு ஆறுதல் கூறினார்.
