

சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் மோதலில் ஈடுபடுவது வாடிக்கையாகியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்ற ஒரு சம்பவம் நேற்று பேசின்பாலம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட் வளாகம் நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில் பேசின்பாலம் ரயில் நிலையத்துக்கு நேற்று காலை 9 மணிக்கு வந்தது. அப்போது, அந்த ரயிலிலிருந்த இருதரப்பு மாணவர்கள் திடீரென மோதிக் கொண்டனர்.
அவர்கள் நடைமேடையில் இறங்கி ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். பின்னர் ஒரு தரப்பினர் ஓடினர். அவர்களை மற்றொரு தரப்பினர் விரட்டிச் சென்றனர். இதுகுறித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில், சென்ட்ரல் ரயில்வே போலீஸாரும், ஆர்.பி.எஃப். போலீஸாரும் அங்கு விரைந்து வந்து, அவர்களைத் தேடினர்.
பேசின்பாலம் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, சில மாணவர்களை ரயில்வே போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.