Published : 08 Feb 2023 04:17 AM
Last Updated : 08 Feb 2023 04:17 AM
காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நெடுங்காட்டில் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோயிலிலிருந்து 64 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன 2 சுவாமி சிலைகளை மீட்டுத் தரக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இந்தக் கோயிலில் நெடுங்காடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த சட்டநாத குருக்கள்(90) 1949-ம் ஆண்டு முதல் 1982-ம் ஆண்டு வரை அர்ச்சகராக பணியாற்றியுள்ளார். 64 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலில் இருந்த 2 சிலைகள் காணாமல் போனதாக நெடுங்காடு காவல் நிலையத்தில் சட்டநாத குருக்கள் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 1959-ம் ஆண்டு மாசி மாத கடைசியில் கோயிலின் பிரதான வாயிலை திறந்தபோது, உள்ளே பூட்டப்பட்டிருந்த கதவு திறந்திருந்ததுடன், கோயிலுக்குள் இருந்த நடராஜர், சிவகாமசுந்தரி, மாணிக்கவாசகர் ஆகிய 3 ஐம்பொன் சிலைகள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.
அதன் பின்னர் தேடிப் பார்த்ததில் 15 நாட்களுக்குப் பிறகு, வாஞ்சியாற்றில் நடராஜர் சிலை மட்டும் கண்டெடுக்கப்பட்டு, கோயில் நிர்வாகம் சார்பில் மீண்டும் கோயிலில் வைக்கப்பட்டது. ஆனால், மற்ற 2 சிலைகள் இதுவரை கிடைக்கவில்லை. எனவே, இந்த 2 சிலைகளையும் கண்டுபிடித்து மீட்டுத் தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT