

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள மேலவளவைச் சேர்ந்தவர் ராமு (61). ஓய்வுபெற்ற ஆசிரியர். சனிக்கிழமை மேலூரிலுள்ள ஒரு வங்கியில் ரூ. 4 லட்சம் எடுத்து தனது பைக்கில் வைத்துக்கொண்டு புறப்பட்டார்.
மேலூர்- அழகர்கோவில் சாலையிலுள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது பேத்தியை அழைத்துச் செல்வதற்காக பைக்கை பள்ளிக்கூடம் எதிரே சாலையோரம் நிறுத்தினார். பின்னர் உள்ளே சென்று பேத்தியை அழைத்துக்கொண்டு திரும்பியபோது, 2 பைக்குகளில் வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க 4 பேர் ராமுவின் பைக்கின் பெட்டியைத் திறந்து பணத்தை திருடிக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமு திருடன், திருடன் எனக் கூச்சல்போடவே, திருடர்கள் அவசரத்தில் ரூ. 2.20 லட்சத்தை மட்டும் திருடிக்கொண்டு எஞ்சிய ரூ.1.80 லட்சத்தை பெட்டியிலேயே விட்டுச் சென்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிகர திருட்டு தொடர்பாக ராமு கொடுத்த புகாரின்பேரில். மேலூர் காவல் ஆய்வாளர் சார்லஸ் வழக்குப் பதிந்து திருடர்களைத் தேடி வருகிறார். மேலூர் - அழகர்கோவில் சாலையிலுள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்கின்றனர்.