வாடிக்கையாளர்கள் போல் அழகு நிலையத்துக்குள் நுழைந்து பெண் ஊழியர்களிடம் கத்தி முனையில் வழிப்பறி: கைதான இளைஞர் அளித்த பரபரப்பு தகவல்கள்

வாடிக்கையாளர்கள் போல் அழகு நிலையத்துக்குள் நுழைந்து பெண் ஊழியர்களிடம் கத்தி முனையில் வழிப்பறி: கைதான இளைஞர் அளித்த பரபரப்பு தகவல்கள்
Updated on
1 min read

சென்னை: சென்னை நொளம்பூரில் பியூட்டி பார்லர் ஒன்று செயல்படுகிறது. கடந்த 8-ம் தேதி வாடிக்கையாளர்களைப் போல் அங்கு நுழைந்த முகமூடி அணிந்த 6 பேர் கும்பல் கத்தி முனையில் பெண் ஊழியர்களை மிரட்டி ரூ.2.5 லட்சம்,8 செல்போன்கள், பெண் ஊழியரின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து தப்பியது. இதுகுறித்து நொளம்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

சுமார் 100 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னரும் கொள்ளையர்கள் பற்றி துப்பு துலங்கவில்லை. இந்நிலையில் கடந்த 10-ம் தேதி கொள்ளையர்கள் திருடிச்சென்ற 2 செல்போன்களை ஸ்விட்ச் ஆன் செய்தபோது அந்த செல்போன் எண்ணை வைத்து அவர்கள் கண்ணகி நகரில் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அங்கு சென்றபோது, அவர்கள் செல்போன்களை ஸ்விட்ச் ஆப்செய்ததால் மீண்டும் போலீஸாருக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சிட்லபாக்கத்தை சேர்ந்த ஆகாஷ் (19) என்பவர் பிடிபட்டார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘ஆகாஷிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பியூட்டி பார்லர் மற்றும் மசாஜ் செண்டரில் அதிகமாக பெண்கள் வேலைசெய்வதால் எளிதில் கொள்ளையடித்து விடலாம் என்ற எண்ணத்திலும், குறிப்பாக லொக்காண்டோ போன்ற ஆன்லைன் வலைதளங்களில் சலூன், மசாஜ் பார்லரை தேடி, அதன் பிறகு வாடிக்கையாளர்கள்போல் சலூன், மசாஜ் சென்டரில் கும்பலாக நுழைந்து ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின், செல்போன், பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

இதேபோல் கடந்த 12 நாட்களில் மட்டும் முடிச்சூர், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள பியூட்டிபார்லரில் நுழைந்து ஊழியர்களிடம் இருந்த செல்போன், பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றதும், கொள்ளையில் ஈடுபட்டவுடன் சிசிடிவி காட்சிகள் மூலம் பிடிபட்டு விடக்கூடாது என்பதற்காக போலீஸாரை திசைதிருப்ப இருசக்கர வாகனத்தை வேறு இடத்தில் நிறுத்தி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை தேடி வருகிறோம்’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in