Published : 25 Nov 2022 06:45 AM
Last Updated : 25 Nov 2022 06:45 AM
ஆவடி: திருநின்றவூரில் தனியார் பள்ளி தாளாளர் மகன், இரு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், பள்ளி தாளாளர் மகன் பேசியதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் தனியார் பள்ளி தாளாளரின் மகன் வினோத்(38), சமீபத்தில் கவுன்சிலிங் அளிப்பதாக கூறி, பிளஸ் 2 மாணவிகள் இருவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் மற்றும் பெற்றோர் பள்ளி தாளாளர் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதன் விளைவாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருநின்றவூர் போலீஸார், போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ், வினோத் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீஸார், கோவா மாநிலத்துக்கு தப்பியோடியுள்ள வினோத்தை கைது செய்ய, அங்கு விரைந்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் வினோத் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், வினோத், “உண்மை என்னவென்று தெரிந்து கொண்டு பேச வேண்டும். உண்மை என்னவென்று தெரியாமல் பேசுகிறார்கள். ஏற்கெனவே விஷமருந்தியுள்ளேன். மீண்டும் விஷமருந்துகிறேன்” என்று கூறிக் கொண்டே விஷம் அருந்துகிறார்.
தொடர்ந்து, அவர் பேசும்போது, “ஒவ்வொரு முறையும் பாலியல் ரீதியாக சர்வ சாதாரணமாக ஒருவரை உட்கார வைத்து முடக்க முடியும் என்றால், அது தப்புங்க. நேர்மையாக நின்று குழந்தைகளுக்காக போராடும் எத்தனையோ ஆசிரியர்கள் இங்கே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்காக நான் இறந்து போகிறேன். ஓர் ஆசிரியர் தன் சுயநலத்துக்காக இப்படி பண்ணமுடியும் என்றால் அது நியாயமில்லை.நாம் வாழும் பூமியில் சக மனிதனை மனிதனாக நேசிக்க வேண்டும்” என்கிறார்.
இப்படி வினோத் கண்ணீர் மல்க பேசியதாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT