

மதுரை: திருமங்கலத்தில் கடந்த 2 நாளுக்கு முன்பு கறி விருந்து நிகழ்வின்போது, நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிக்கிய வேதகிரி என்பவர் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை செய்யும் நபரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள கொக்குளத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தனசேகரன். இவர், திருமங்கலம் காட்டுப்பத்திர களியம்மன் கோயிலில் கடந்த 13-ம் தேதி கறி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். குடும்பத்தினர் மட்டுமின்றி நண்பர்கள், ரியல் எஸ்டேட் தொழிலிலுள்ள நண்பர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், நண்பர்கள் சிலர் மது விருந்தில் பங்கேற்றபோது, ஏ.தொட்டியபட்டி கணபதி என்பவருக்கும், மதுரை அருகிலுள்ள கீழபனங்காடியைச் சேர்ந்த வழக்கறிஞர் வேதகிரிக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.
அப்போது, கைத்துப்பாக்கியை காட்டி, வேதகிரி மிரட்டியுள்ளார். பொம்மை துப்பாக்கியை வைத்து மிரட்டினால் பயப்பட மாட்டேன் என கணபதி கூறியதால் ஆத்திரமடைந்த வேதகிரி பூமி, வானத்தை நோக்கி சுட்டார். இதைத் தொடர்ந்து அவர் தனது நண்பர்களுடன் காரில் ஏறி தப்பினார். இது பற்றி தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். கணபதி, தனசேகரன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
இவர்களின் தகவலின் அடிப்படையில், 13-ம் தேதி நள்ளிரவே வேதகிரி (41) கைது செய்யப்பட்டார். மேலும், இச்சம்பவத்தில் தனசேகரன் (48), கணபதி (42), சதீஸ்குமார் (42) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். வேதகிரியிடம் இருந்து பறிமுதல் செய்த பிஸ்டல் துப்பாக்கிக்கு உரிமம் இருப்பதும், ஏர்கன் துப்பாக்கி ஒன்றுக்கு உரிமம் இல்லாததும் தெரிய வந்தது. மேலும், அவர் ஏர்கன் துப்பாக்கிகளை வெளியிடத்தில் வாங்கி, கூடுதல் விலைக்கு சிலருக்கு விற்றது போன்ற சில தகவல்களும் வெளியானது. இதைத் தொடர்ந்து அவர் பற்றிய விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
போலீஸ் தரப்பில் கூறும்போது, ''மக்கள் கூடிய இடத்தில் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார் என்ற துப்பாக்கி கலாச்சாரத்தை எளிதில் எடுத்துக் கொள்ள முடியாது. பொது இடத்தில் சாதாரணமாக துப்பாக்கியால் சுட்டு மிரட்டி இருக்கிறார். ஒருவர் பிஸ்டல், ஏர்கன் வைத்திருந்ததால் அவர் பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம். அவர் ஏர்க்கன், பிஸ்டல் துப்பாக்கிகள் விற்கும் கடை ஒன்றும் நடத்துவதாகவும் தற்போது தகவல் வெளியாகிறது.
அது குறித்தும் விசாரிக்கிறோம். இவ்விவகாரத்தில் காவல் துறை மட்டுமின்றி மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளும் விசாரிக்கின்றனர். பிறரால் ஒருவருக்கு கொலை மிரட்டல் இருந்தால் மட்டுமே கைக்துப்பாக்கி உரிமம் வழங்கப்படும். இது போன்ற விதிமுறைகள் முறையாக பின்பற்றி உரிமம் வழங்கப் பட்டுள்ளதா போன்ற பல்வேறு கோணத்திலும் விசாரிக்கிறோம்'' என்றனர்.
ரவுடிகளுக்கு துப்பாக்கிகள் சப்ளையா? - வேதகிரி ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பதால் தொழில் போட்டியின் காரணமாக தனக்கான ஆபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள அவர் துப்பாக்கிகள் வாங்கி இருக்கலாம். அதே நேரத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்கும் கடை ஒன்றை நிறுவி, அதன்மூலம் தேவைப்படுவோர் அவர் கூடுதல் விலையில் விற்பனை செய்திருக்கலாம் என்றும், தென்மாவட்ட ரவுடிகள் சிலருக்கும் கைத்துப்பாக்கி, ஏர்க்கண்களை விற்பனை செய்தாரா என்ற சந்தேகமும் போலீஸ் தரப்பில் எழுந்துள்ளது. இது பற்றியும் போலீஸார் விசாரிக்கின்றனர்.