கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களுடன் எஸ்பி தீபிகா டீம்
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களுடன் எஸ்பி தீபிகா டீம்

எஸ்பி தீபிகா டீம் அதிரடி | சென்னைப் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 6 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்; 6 பேர் கைது

Published on

புதுச்சேரி: சென்னை பகுதியில் கன்டெய்னரில் பதுக்கிய ரூ.50 லட்சம் மதிப்புள்ள 6 டன் போதைப் பொருட்களை புதுச்சேரி போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து சீனியர் எஸ்பி தீபிகா உத்தரவின் பேரில் தனி சிறப்புப் படை அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு படையினர் அவ்வப்போது சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், புதுச்சேரி சாரம் தென்றல் நகரில் உள்ள ஒரு வீட்டில் கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த மொத்த வியாபாரி மணிகண்டன் (22) என்பவரை கைது செய்த போலீஸார் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை போதைப் பொருட்கள் மற்றும் அவற்றை விற்றதன் மூலம் கிடைத்த ரூ.24.56 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கைப்பற்றினர்.

பின்னர் மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில் சென்னை மதுராந்தகத்தை சேர்ந்த ஷாஜகான் (49), சத்தியமூர்த்தி (35) ஆகியோரிடம் இருந்து போதைப் பொருட்களை வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். ரூ.7.31 லட்சம் பணம், போதை பொருட்களை ஏற்றி அனுப்பும் மினி கன்டெய்னர் லாரி, சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்கள் சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ரவி (38) என்பவரிடம் போதைப் பொருட்களை வாங்கியதாக கூறினர். இதையடுத்து சிறப்புப் படை போலீஸார் ரவியை இன்று கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் 2 கன்டெய்னர் மற்றும் 2 லோடு கேரியர் வாகனத்தை போலீஸார் சோதனையிட்டனர்.

அவற்றில் மூடைகளில் கட்டப்பட்ட புகையிலை, குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 6 டன் எடையுள்ள போதைப் பொருட்களையும், வாகனங்களையும் கைப்பற்றினர்.

இதையடுத்து ரவியுடன் சேர்த்து மரக்காணம் குமார் (31), சென்னை நடராஜன் (52), தூத்துக்குடியைச் சேர்ந்த கோபால் (30), மணிகண்டன் (24), ஆனந்த் (28) ஆகியோரையும் கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர். கைப்பற்றிய போதை பொருட்கள் அடங்கிய வாகனங்களும் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டன.

டி.நகர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வானங்களில் இருந்த போதை பொருட்களை புதுச்சேரி சீனியர் எஸ்பி தீபிகா பார்வையிட்டு போலீஸாரை பாராட்டினார். பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in