

மதுரை: ஏமன் நாட்டில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பிறகு அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
வெளிநாடு, மாநிலங்களில் இருந்து மதுரை வரும் விமான பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட உடைமைகளை விமான நிலைய குடியேற்றத் துறையினர் ஆய்வு செய்வது வழக்கம். இதன்படி, துபாயிலிருந்து நேற்று மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமான பயணிகளிடம் விமான நிலைய குடியேற்றத் துறையினர் சோதனை செய்தனர். அப்போது, இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் பணிபுரிந்து, பின்னர் விமானம் மூலம் துபாய் வழியாக மதுரை வந்தடைந்த 3 பேர் சிக்கினர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம், பந்துரான் வட்டம், நாயன தெருவை சேர்ந்த சின்னத் தம்பி மகன் ராஜாகுட்டி (40), தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் மகாராஜபுரம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த சின்னப்பிள்ளை மகன் ராஜ்குமார் (36), திருப்பத்தூர் மாவட்டம், நாற்றம்பள்ளி அருகிலுள்ள பாரதிநகர் வேலு மகன் சின்னப்பன் (51) என தெரியவந்தது. இவர்கள் இந்திய பாஸ்போர்ட் விதியின்படி, தடை செய்யப்பட்ட அரபு நாடுகளுக்கு சென்றது குறித்து விசாரிக்க, அவனியாபுரம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களிடம் அவனியாபுரம் போலீஸார் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து மூவர் மீதும் பாஸ்போர்ட் சட்ட விதியின்படி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சொந்த ஜாமீனில் அவர்களை விடுவித்தாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.