

மதுரை: தேனி நகைக் கடை அதிபரின் காரில் 85 பவுன் நகைகள் திருடுபோனது. மதுரை அருகே அரசரடி பகுதியில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்தியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
தேனியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (54). தேனியில் நவமணி என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடை மூலம் விற்கப்படும் நகைகளுக்கு "ஹால் மார்க் முத்திரை" பதிவு செய்வதற்காக மதுரைக்கு அடிக்கடி வருவது வழக்கம். இதன்படி, நேற்று 87 பவுன் (697.610 கிராம்) நகைகளுடன் காரில் மதுரை வந்தார். மதுரை அருகே அரசரடி அருகிலுள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்காக காலை 9.40 மணிக்கு காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் ராஜகோபால், கடையின் மேலாளர் சையது ஆகியோருடன் சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது, காரில் இருந்து 87 பவுன் நகைகள் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக எஸ்எஸ். காலனி போலீஸில் செந்தில்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை தொடங்கினர். மேலும், சந்தேகத்தின் பேரில், கார் ஓட்டுநர், நகைக் கடை மேலாளரிடமும் போலீஸார் விசாரிக்கின்றனர்.
போலீஸார் கூறுகையில், "சிசிடிவி கேமரா பதிவு மூலம் சில தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் நகை திருடியவர்களை நெருங்கிவிட்டோம். ஓரிரு நாளில் பிடித்துவிடுவோம்" என்று கூறினர்.