

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்தில் ஜிஎஸ்டி பணம் ரூ.55.75 லட்சத்தை கையாடல் செய்த இளநிலை எழுத்தரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் செல்லும் சாலையில் மின்துறை தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மின்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் அலுவலகம், நிதி கட்டுப்பாட்டாளர், மின்கட்டணம் வசூல், பராமரிப்பு அலுவலக பணிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இங்கு நிதி கட்டுப்பாட்டாளர் பிரிவின் பொறுப்பு அதிகாரியாக மோகன்குமார் (52) என்பவர் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் மின்துறை மூலம் 2020 ஜனவரி முதல் 2022 ஆகஸ்ட் மாதம் வரையில் செலுத்தப்பட வேண்டிய ஜிஎஸ்டி தொகை ரூ.55 லட்சத்து 75 ஆயிரம் முறையாக கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது மின்துறை நிதி கட்டுப்பாட்டு வங்கிக் கணக்கில் இருந்து மேற்கண்ட அந்த தொகை எடுக்கப்பட்டுள்ளதோடு, ஜிஎஸ்டியும் செலுத்தப்படாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், அங்கு இளநிலை எழுத்தராக பணிபுரியும் மூலகுளத்தைச் சேர்ந்த யோகேஷ் (42) என்பவர் அப்பணத்தை நூதனமான முறையில் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து நிதி கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரியான மோகன்குமார் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து யோகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரி செலுத்தவேண்டிய ரூ. 55 லட்சத்து 75 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் பல்வேறு தவணைகளாக யோகேஷ் தன்னுடைய சொந்த வங்கி கணக்குக்கு மாற்றம் செய்திருப்பதும், ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்ததுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவித்தனர்.