

உதகையில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "உதகையை அடுத்த காந்தல் பகுதியிலுள்ள மரியன்னை ஆலய தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இதையொட்டி, காந்தல் ரோகிணி சந்திப்பு பகுதியிலிருந்து காந்தல் பஜார் செல்லும் வழியில் வந்த வாகனங்களை போலீஸார் நிறுத்தினர்.
அப்போது, அந்த வழியாக வந்த காந்தல் பகுதியைச் சோ்ந்த ஜான் எட்வின் (25), காரை நிறுத்தாமல் போலீஸாரிடம் தகராறு செய்ததில் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ஜான் எட்வின், அங்கு பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளர் ஷியாம் சுந்தரை தாக்கினார். இதையடுத்து, சக போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உதகை நகர மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து, ஜான் எட்வினை கைது செய்தனர். குன்னூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி, உதகை கிளைச் சிறையில் அடைத்தனர்.