

சென்னை: சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சென்னையில் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல் துறையின், பாதுகாப்பு பிரிவில் காவல் உதவிஆய்வாளராக இருப்பவர் பாண்டியராஜ் (50). ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கணவரை பிரிந்த பெண் ஒருவருடன் தவறான உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண்ணின் மகளுக்கு 13 வயது இருக்கும்போது பாண்டியராஜ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தற்போது, அந்த சிறுமிக்கு 20 வயதாகிறது. கல்லூரி முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அந்த மாணவியிடம் மீண்டும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். மறுப்பு தெரிவித்த மாணவிக்கு பல வழிகளில் பாண்டியராஜ் தொந்தரவு கொடுத்து வந்தாராம்.
இதனால், வேதனை அடைந்த அந்த பெண் இதுகுறித்து சென்னைகாவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் தெரிவித்தார். அதன்படி, விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து பாண்டியராஜை கைது செய்தனர்.