

கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இப்பகுதியில் காவல்துறையினர், தன்னார்வலர்களுடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவானிசாகர் அணையில் இருந்து 124 மைல் தூரம் கொண்ட கீழ்பவானி வாய்க்கால் ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளைத் தொட்டு செல்கின்றது. கீழ்பவானிவாய்க்காலில் பாசனத்துக்கு நீர்திறக்கும் காலங்களில் அதில் குளிக்கச் செல்லும்போது விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதேபோல, பல்வேறு காரணங்களுக்காக வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் அண்மை காலமாக அதிகரித்து வருவது விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தொடர் தற்கொலைகள்
கோபியை அடுத்த கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் தீபக். பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (37). இவர்களது மகள்கள் மதுநிஷா (12), தருணிகா (6). தம்பதி இடையே கடந்த 20-ம் தேதி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, விஜயலட்சுமி தனது இரு மகள்களுடன், குருமந்தூர் அருகே சுட்டிக்கல் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் குதித்தார். வாய்க்காலில் விநாடிக்கு 2,100 கனஅடி நீர் செல்லும் நிலையில், வாய்க்காலில் குதித்த 3 பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற விஜயலட்சுமியின் உறவினர்கள், மீனவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவர்களை தேடியபோது, 3 கிமீ தொலைவில், மதுநிஷா வாய்க்கால் கரையோரம் உள்ளமரத்தைப் பிடித்தபடி உயிருக்கு போராடியதை பார்த்து அவரை மீட்டனர். தொடர் தேடுதலில், 15 கிமீ தொலைவில் வேட்டைக்காரன் கோயில் பகுதியில் விஜயலட்சுமியின் உடல் கண்டறியப்பட்டது. தருணிகாவை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
புன்செய் புளியம்பட்டியை அடுத்த நல்லூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (46). மளிகைக்கடை வியாபாரி. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களது மகன்கள் சிரஞ்சீவி (6) விக்னேஷ் (3). தம்பதி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறால், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் விஜயகுமார் தனது இரு மகன்களுடன் கோபி அருகே காளிகுளம் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் குதித்தார்.
இதில், சிரஞ்சீவியின் உடல் கோபி அருகே உள்ள உக்ரம் குப்பன் துறை பகுதியில் மீட்கப்பட்டது. விஜயகுமார் மற்றும் விக்னேஷை 4-வது நாளாக நேற்று சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
முதியவர் தற்கொலை
பெருந்துறை அடுத்த கொளத்தான்வலசு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (70). இவருக்கு மதுப்பழக்கம் உள்ள நிலையில், பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியில், கீழ்பவானி வாய்க்காலில் குதித்து நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். .
இப்படி தொடர்ந்து நடைபெற்று வரும் தற்கொலை துயரங்களை தடுக்க காவல்துறையினர், தன்னார்வலர்களுடன் இணைந்து கீழ் பவானி வாய்க்கால் பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும். மேலும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரை மீட்டு, அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.