புதுச்சேரி | நம்பர் ப்ளேட் இல்லாமல் சிக்கிய நபர் - திருடப்பட்ட 28 பைக்குகள் மீட்கப்பட்ட கதை

புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பைக் திருடியதாக கைது செய்யப்பட்ட நபர்.
புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பைக் திருடியதாக கைது செய்யப்பட்ட நபர்.
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மோட்டார் பைக் திருடிய கடலூரைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 28 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரியில் சமீப காலமாக மோட்டார் பைக்குகள் திருடு போகும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகின்றது. போலீஸார் தீவிர முயற்சி எடுத்தும் பைக் திருடும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சீனியர் எஸ்பி தீபிகா உத்தரவின் பேரில் நேற்று இரவு புதுச்சேரி முழுவதும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அதுபோல் ஒதியஞ்சாலை போலீஸார் புதுச்சேரி காந்தி வீதி - சின்னவாய்க்கால் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக மோட்டார் பைக்கில் வந்த நபரை நிறுத்தினர். அவர் ஓட்டிவந்த மோட்டார் பைக்கின் முன்பக்கத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் பைக்கின் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதில் அந்த நபர் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும், அதனை புதுச்சேரி அண்ணா சாலையில் மதுக்கடை எதிரே திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் சி.என்.பாளையத்தை அடுத்த கிடையார்குப்பத்தை சேர்ந்த சவுந்திரராஜன் (25) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் இதுபோல் புதுச்சேரியில் 27 வாகனங்களை அவர் திருடியதும் தெரிந்தது. இதனைத் தொடர்ந்து சவுந்தரராஜனை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 28 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in