

திருப்பூர்: பல்லடம் அருகே காலி நிலத்தில் அலைபேசி டவர் அமைத்து அதற்கு வாடகை தருவதாகக் கூறி, அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பி வங்கிக் கணக்கு வாயிலாக பணம் பறித்த நபரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னியக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல். ஜவுளித்தொழிலில் ஈடுபட்டிருந்தார். இவருடைய அலைபேசி எண்ணுக்கு கடந்த பிப். 24-ம் தேதி 4ஜி மற்றும் 5ஜி அலைபேசி டவர் அமைத்து தருவதாகக் கூறி குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதிலிருந்த எண்ணைத் தொடர்புகொண்டுள்ளார் கதிர்வேல். அலைபேசி டவர் அமைக்க வேண்டிய இடத்தை புகைப்படம் எடுத்து அனுப்ப சொல்லி இருக்கிறார் எதிர்முனையில் பேசிய நபர். இதையடுத்து அந்த இடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், மாதாமாதம் பல ஆயிரம் வாடகை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, கதிர்வேலிடமிருந்து சிறுகச்சிறுக பணம் பறித்துள்ளார் எதிர் முனையில் பேசிய நபர்.
ஒரு கட்டத்தில், ரூ. 1 லட்சத்து 65 ஆயிரம் பணத்தை மொத்தமாக வங்கிக் கணக்கில் கட்டிய பின்பு, அடையாளம் தெரியாத நபர் மீண்டும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு கேட்டுள்ளார். அப்போது கதிர்வேலுக்கு சந்தேகம் எழுந்த நிலையில், இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாங்சாய் உத்தரவுப்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி முன்னிலையில், ஆய்வாளர் சித்ராதேவி மற்றும் உதவி ஆய்வாளர் ரோஸ்லின் அந்தோனியம்மாள் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கதிர்வேல் பேசிய அலைபேசி எண்ணைக் கொண்டு குற்றவாளியைத் தேடி வந்தனர்.
விசாரணையில் கதிர்வேலிடம் பேசியது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உஞ்சனையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி செல்வமணி (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 2 அலைபேசிகள், சிம் கார்டுகள் மற்றும் ரூ. 37 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளை பறிமுதல் செய்த போலீசார் செல்வமணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.