

கரூர்: கரூர் அருகே வேனில் கடத்தப்பட்ட 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் புன்னம் அருகே குட்கா பொருட்கள் பதுக்கி விற்கப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் நேற்று சோதனை நடத்தியபோது கரூர் வேல்நகர் மில்கேட்டை சேர்ந்த முருகன் (42) என்பவரிடம் இருந்து பதுக்கி வைத்திருந்த 2 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும், முருகனை கைது செய்ததுடன், அவர் அளித்த தகவலின் பேரில் ஞானபரப்பிலிருந்து ஆத்தூர் சாலையில் மூர்த்திபாளையத்தில் வாகன சோதனை மேற்கொண்டப்போது அவ்வழியே வந்த வேனை நிறத்தி சோதனையிட்டபோது ரூ.2,28,440 லட்சம் மதிப்புள்ள 304.40 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கைப்பற்றினர்.
மேலும், வேன் ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம்புதூர் சாலையை சேர்ந்த முனியசாமியை (42) கைது செய்தனர். வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் வினோதினி மற்றும் போலீஸாருக்கு எஸ்.பி. சுந்தரவதனம் பாராட்டு தெரிவித்தார். மேலும், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை யாரேனும் விற்பனை செய்வதாக தெரியவந்தால் தனது செல்போன் எண்ணில் 94981 88488 புகார் தெரிவிக்கலாம் எனக் கூறினார்.