Last Updated : 08 Aug, 2022 09:05 AM

 

Published : 08 Aug 2022 09:05 AM
Last Updated : 08 Aug 2022 09:05 AM

கடன் தருவதாக மக்களை ஏமாற்றும் வடமாநில கும்பல்: சைபர் கிரைம் பிரிவில் குவியும் புகார்கள்

சமூக வலைதளங்களைப் பயன்படுத்து வதால் எந்த அளவுக்குப் பயன் இருக்கிறதோ, அதே அளவுக்குத் தீமைகளும் உள்ளன. வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் நாம் உலவும்போது இடைச்செருகலாக அடிக்கடி வரும் கடன் தரும் நிறுவனங்களின் விளம்பரங்களை நம்பி பலர் ஏமாறுகின்றனர்.

இதன் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பலர், கடைசியில் காவல் துறையை நாடுகின்றனர். இதுபோன்ற குற்றச் செயல்களில் பெரும்பாலும் வடமாநிலக் கும்பல்களே ஈடுபடுவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

சமீப காலமாக குறிப்பிட்ட சில தனியார் நிதி நிறுவனங்களின் பெயரில் கடன் தருவதாக முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கின்றனர். அந்நிறுவனங்களை தொடர்பு கொண்டால், கடன் பெறுபவர்களின் சுய விவரம், புகைப்படம் உள்ளிட்டவற்றை பதிவிடும் வகையில் ‘லிங்க்’ ஒன்றை அனுப்புகின்றனர்.

அதில் விவரங்களைப் பதிவிட்டு அனுப்பினால், சம்பந்தப்பட்ட நபரின் மொபைல் போனில் உள்ள தொடர்பு எண்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை கடன் கொடுக்கும் நிறுவனங்கள் என்ற பெயரில் செயல்படும் மோசடி கும்பல் ரகசியமாக திருடி எடுத்துக்கொள்கிறது.

பின்னர் கடன் தொகையைத் தரும் அந்த கும்பல், குறித்த காலத்துக்குள் பணத்தைத் திருப்பிச் செலுத்தினாலும் ஆவணங்களுக்கான செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி கூடுதல் பணத்தைக் கறாராகப் பெறுகின்றனர். சிலர் குறித்த காலத்துக்குள் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து உறவினர்களுக்கும், நண்பர் களுக்கும் அனுப்பிவிடுவோம் என்று மிரட்டுகின்றனர்.

இதனால் கடன் பெற்ற தொகைக்கும் மேலாக பலமடங்கு பணத்தை செலுத்த வேண்டியுள்ளது. இதுபோன்று லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாறும் பலர், இறுதியில் சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் கூறியதாவது: ஆன்லைனில் கடன் பெற்று ஏமாற்றப்பட்டதாக மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏராளமானோர் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே, குறைந்த வட்டி, உடனுக்குடன் கடனுதவி என சமூக வலைதளங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.

இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுவோரைக் கண்டறிய முயன்றால் அவர்கள் பெரும்பாலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். சில வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்தாலும் அவர்களிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்வது சவாலாகவே உள்ளது. சிறையில் அடைத்தாலும் ஜாமீன் பெற்று வெளியே வருவோர் மீண்டும் அதே குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அறிமுகமில்லாத நபர்களிடம் வங்கி ஏடிஎம் கார்டு ரகசிய எண், ஓடிபி குறித்த தகவல்களைத் தெரிவிக்கக் கூடாது என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x