பேரையூர் அருகே திமுக பிரமுகர் கொலை: உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றுக்குள் வீசி கொடூரம்
மதுரை: பேரையூர் அருகே திமுக பிரமுகரை கொலை செய்து, உடலை சாக்கு மூட்டைக்குள் கட்டி கிணற்றுக்குள் வீசிய கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகிலுள்ள எம். சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி. இவரது மகன் பாலாஜி (25). திமுக பிரமுகரான இவர், பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் புரிந்தார். இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தைகள் உள்ளது. கடந்த 20ம் தேதி திடீரென பாலாஜியை காணவில்லை. வெளியூர் சென்றிருக்கலாம் என, அவரது குடும்பத்தினர் தேடினர். ஆனாலும், கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், கவட்டிநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு நேற்று இளைஞர்கள் சிலர் முயல்வேட்டைக்குச் சென்றபோது, சாமி ராஜ் என்பரின் தோட்டத்து கிணற்றுக்குள் சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில், சடலம் ஒன்று மிதப்பது தெரிந்தது.
அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். பேரையூர் காவல் ஆய்வாளர் காந்தி, எஸ்ஐ லட்சுமணன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும், தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் சுமார் 40 கிலோ கல்லால் சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில், கிடந்த ஆண் சடலத்தை மீட்டனர்.
கை, கால்களை கட்டி கொன்று கிணற்றுக்குள் உடலை வீசியிருப்பது தெரியவந்தது. அடையாளம் தெரியாமல் உடல் அழுகும் வகையில் சாக்கு மூட்டையை இணைத்து 40 கிலோ கல் கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இறந்தவரின் பேண்ட், சட்டையை ஆய்வு செய்தபோது, ஆதார் கார்டு ஒன்று சிக்கியது.
அவர் காணாமல் போன திமுக பிரமுகர் பாலாஜி என்பது தெரிந்தது. திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடலை போலீஸார் அனுப்பினர். முதல்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என்றாலும், பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை அல்லது பெண் விவகாரத்தில் அவர் கொல்லப்பட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் பேரையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
