எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட 25 நாட்களில் தம்பதி கொலை

எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட 25 நாட்களில் தம்பதி கொலை
Updated on
1 min read

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட 25 நாட்களில் தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கடலையூரை அடுத்துள்ள வீரப்பட்டி சேவியர் காலனியைச் சேர்ந்த வடிவேல் மகன் மாணிக்கராஜா (25). லாரி ஓட்டுநரான இவர் அதே பகுதியை சேர்ந்த முத்துகுட்டி மகள் ரேஷ்மா (20) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காத நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி மாணிக்கராஜா, ரேஷ்மாவுடன் மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். போலீஸார் விசாரணை நடத்தி, அவர்கள் இருவரும் மேஜர் என்பதால் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தினர்.

இதற்கிடையே, எட்டயபுரம் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லையென ரேஷ்மாவின் தந்தை முத்துகுட்டி புகார் அளித்திருந்தார். ரேஷ்மா காதலுனுடன் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது தெரியவந்தவுடன், எட்டயபுரம் போலீஸார் அவர்களை வீரப்பட்டி வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் மாணிக்கராஜா தனது காதல் மனைவி ரேஷ்மாவுடன் சொந்த ஊரான வீரப்பட்டிக்கு வந்தார். இன்று காலை சுமார் 12 மணியளவில் தம்பதி வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது அங்கு மர்ம நபர்கள் மாணிக்கராஜா, ரேஷ்மா ஆகியோரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.

தகவல் அறிந்து விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ், கோவில்பட்டி டி.எஸ்.பி. (பொறுப்பு) சிவசுப்பு, எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, கணவன் - மனைவி சடலங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரேஷ்மாவின் தந்தை முத்துகுட்டி, இருவரையும் கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து எட்டயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in